கோவில்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண்குமார் (25) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கரண்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கரண்குமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 3 வழக்குகளும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.