தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
கடந்த 06.08.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவராமமங்கலம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டராமன் மகன் சொக்கலிங்கம் (70) என்பவரை சொத்து பிரச்சினை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்தவர்களான சீனி மகன் பூல்பாண்டி (42), மந்திரம் மகன் சாமிநாதன் (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் பூல்பாண்டி மற்றும் சாமிநாதன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் அவர்களும்,
கடந்த 08.05.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் காந்திபுரம் பகுதியில் விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த பாரீஸ் மகன் சாரூக் ராஜா (28) மற்றும் சிலரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சாரூக் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்தவர்களான சீனி மகன் 1) பூல்பாண்டி, மந்திரம் மகன் 2) சாமிநாதன் மற்றும் திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த பாரீஸ் மகன் 3) சாரூக் ராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் உட்பட 116 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.