தன்னை தாக்கியதாக முன்னாள் எம்எல்ஏ மற்றும் தனியார் காற்றாலை ஊழியர் என இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தர்ராஜ், தற்போது அமமுக வின் தலைமை கழக அமைப்பு செயலாளராக உள்ளார். இந்நிலையில், தனியார் (Semcorp) காற்றாலை நிறுவனத்தினர், ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் நீரோடை பாதைகளை ஆக்கிரமித்துள்ளதாக பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் புகார் அளித்து வந்த நிலையில், நேற்று ( செப்.,2 ) ஓட்டப்பிடாரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் பொது பாதைகளை ஆக்ரமித்து சிமெண்ட் சாலை அமைத்து வருவதை கண்டித்து அதனை தடுக்க சென்ற முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் மீது காற்றாலை நிறுவன ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி, முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், ஓட்டப்பிடாரம் பகுதியில் தங்களது நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி தன்னை தாக்கியதாக காற்றாலை நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய கடலூரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் என மாறி மாறி புகார் கொடுத்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.