கயத்தாறு அருகே திருமண தரகர் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை போரூரை சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜாராம்(வயது 53). திருமண தரகர். நேற்று முன்தினம் இவர் கயத்தாறில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். அன்று இரவில் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் அருகிலுள்ள ரெங்கால்வார் என்பவரது தோட்டத்திலுள்ள கிணறுடன் கூடிய மோட்டார் அறையில் தங்கினார். அங்கு உறவினர்கள், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அவர் மது குடித்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சென்று விட்ட நிலையில் அவர் அறையில் இருந்துள்ளார்.
காலையில் தோட்டத்திற்கு உறவினர்கள் வந்தபோது அறையில் அவரை காணவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால், அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அதேசமயம் தோட்டத்து கிணறு அருகில் மதுபாட்டில் மற்றும் அவரது செல்போன் இருந்தது. இதனால் அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை தீயணைப்பு துறை அதிகாரி லிங்கதுரை தலைமையில் கிணற்றுக்குள் தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் கிணற்றிலிருந்து நேற்று மேலே கொண்டுவரப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இரவில் மதுகுடித்த ராஜாராம் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டநிலையில், அறையை விட்டு வெளியே வந்துள்ளார். தோட்டத்து கிணற்று சுவரில் அமர முயன்றபோது அவர் தடுமாறி உள்ளே விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.