தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2017-2018 கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பி.ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில்,
தமிழக அரசின் சார்பாக வருடம் தோறும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.
ஆனால் 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க மாவடட் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.