தூத்துக்குடியில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மேல்நிலைப் பள்ளி தெருவை சேர்ந்த பத்திரகாளிமுத்து மகன் முருகேசன் (51) என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் நேற்று (29.08.2023) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே அரசு பேருந்தை ஓட்டி வந்தபோது அங்கு மதுபோதையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த கோல்மன் மகன் விஜய் (29) மற்றும் தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) ஆரோக்கிய சேவியர் மகன் வினோத் (39) ஆகிய இருவரும் அந்த அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரான முருகேசனிடம் தகராறு செய்து, அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன் வழக்கு பதிவு செய்து விஜய் மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட விஜய் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 13 வழக்குகளும், வினோத் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.