விளாத்திகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா மற்றும் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (29.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிசல்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் விளாத்திகுளம் வ.உ.சி தெருவை சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (47) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 50,000 மதிப்புள்ள 230 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான ஜெயராஜ் மீது ஏற்கனவே விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் என 10 வழக்குகளும், எட்டையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், புதூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 19 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.