உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் அனைவரும் சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் இலவசமாக சைக்கிள் பயிற்சி செய்யும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிளானது கிடப்பில் போடப்பட்டு வீணாகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடி மாநகரை தூய்மையான நகரமாக மாற்றும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்காவில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து மாஸ் கிளினிங் என்ற தலைப்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் இலவசமாக சைக்கிள் பயிற்சி செய்யும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த இலவச சைக்கிள் பயிற்சி சேவையை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் அனைவரும் சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கனிமொழி எம்.பி. சைக்கிள் ஓட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது, அந்த சைக்கிள்கள் அனைத்தும் ரோச் பூங்காவில் ஓரம் கட்டப்பட்டு கிடக்கிறது. சைக்கிள்களின் டயர் ரிம்கள் அனைத்தும் துருபிடித்து பயன்பாடுக்கு லாயக்கற்ற நிலையில் பாழாய் போயும் உள்ளது.
சைக்கிள் ஓட்டுவது என்பது நம் உடல்நிலையை மட்டுமின்றி மனநிலையையும் சீராக வைக்க உதவுகின்றது. நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்க மட்டுமல்லாது உடல் எடையைக் குறைக்கவும் உதவுவதுடன், உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. ஆகையால் இதைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில் ஜூலை 9 ம் தேதி 2022 முதல் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான சைக்கிள்களை ஓட்டி பயன்பெறலாம் என ஜூலை 8 ம் தேதி 2022 அன்று தனது முகநூல் பக்கத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால், ஓராண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் அந்த சைக்கிள்கள் அனைத்தும் ஏன் ஓரம் கட்டப்பட்டு பாழாய் போகும் நிலைக்கு ஆளானது என தெரியவில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் எனும் போது அதில் மக்கள் வரிப்பணம் தான் அடங்கியிருக்கிறது. அத்தகைய மக்கள் பணம் ஏன் வீணாகப்போகிறது என்றும் தெரியவில்லை. இதனை கண்காணிக்கக்கூடிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மேயர் மேற்கொள்ளுவாரானால் இனி எதிர்வரும் காலத்தில் இது போன்ற மக்கள் வரிப்பணம் வீணாகமல் பாதுகாக்கப்படும் என நம்பலாம். நடவடிக்கை எடுப்பாரா மேயர்? வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம் காப்பாற்றப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.