ஆத்தூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழையகாயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு பைக்கில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர்.
பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்த ராமசாமியை தாக்கி, அவரிடம் இருந்த பணப்பையை பறித்தனர். அதில் ரூ.11,700 மற்றும் டிக்கெட்டுகள் இருந்தன. இதனை தடுக்க முயன்ற பஸ் டிரைவரான பட்டுராஜாவையும் தாக்கிய அந்த நபர்கள், பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி, பைக்கில் ஏறி தப்பி சென்றனர். இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் ராமசாமி அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில், அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர், டிரைவரை தாக்கி, பணப்பையை பறித்தது காயல்பட்டினம் சிங்கித்துறை கற்புடையார் பள்ளிவட்டத்தைச் சேர்ந்த கசாலி மரைக்காயர் மகன் முத்து ஜமால் (வயது 19), காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீரா சாகிப் மரைக்காயர் மகன் மாலிக் உசேன் (20) உள்ளிட்ட 3 பேர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து முத்து ஜமால், மாலிக் உசேன் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.