சொத்துவரி அளவீடுகளில் மதிப்பீடு கூடுதலாக இருந்தால், மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழுவில் விண்ணப்பித்து தீர்வு பெறலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 இன் படி, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு அமைக்க தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மேயர் குழுவின் தலைவராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாமன்ற உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.
மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், மண்டல அலுவலக உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஆகியோரும் இந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள்.
பொதுமக்கள் தங்களுக்கு மாநகராட்சி மூலம் நிர்ணயம் செய்யப்படும் சொத்துவரி அளவீடுகளில் மதிப்பீடு கூடுதலாக இருந்தாலும், வேறு ஏதேனும் வரிவிதிப்பு குறித்து குறைகள் இருப்பினும் தாங்கள் இந்த குழுவில் மேல்முறையீடு செய்யலாம்.
தங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மேற்காணும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆணையர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.