தூத்துக்குடியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் பங்குகளில் வாகனச் சக்கரங்களுக்கு காற்றடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளிகளை பணியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம், அவர்களை மீண்டும் பணி கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளே வாகனச் சக்கரங்களுக்கு காற்றடைக்கும் பணியில் உள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் பங்குகளில் வாகனச் சக்கரங்களுக்கு காற்றடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளிகளை, பெட்ரோல் பங்க் தீப்பிடித்தால் உங்களால் ஓட முடியாது என சொல்லி பணியில் இருந்து ஜூலை 1ம்தேதி முதல் நீக்கி உள்ளனர் என்று பணியில் இருந்து நீக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
இதுவரை எத்தனை பெட்ரோல் பங்குகள் தீப்பிடித்துள்ளது? அதிலிருந்து மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இது போன்ற காரணங்களை சொல்லி எங்களை பணியில் இருந்து நீக்கி இருப்பது ஏற்க முடியாது. எங்களைப் பணியில் இருந்து தற்போது நீக்கி உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் எங்களை பெட்ரோல் பங்கில் பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கடந்த ஜூலை 3ம் தேதி திங்கள் கிழமை, மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.