ஓட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறை, காமராஜர் நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கார்த்திகேயன் (45) என்பவர் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முப்பலிவெட்டி பகுதியில் கல் உடைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மேற்படி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மதுரை மாவட்டம் பேரையூர் கிளாக்குளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் நாகப்பன் (25) மற்றும் மதுரை பேரையூர், டி. கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் அய்யனார் (32) ஆகிய 2 பேரும் கடந்த 03.07.2023 அன்று மேற்படி நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் வழக்குபதிவு செய்து, நாகப்பன் மற்றும் அய்யனார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.