காணாமல் போன கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் தூத்துக்குடியில் மீட்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த 17.06.2023 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதை கண்ட அதே பகுதியைச் சேர்ந்தவர்களான ஜான்சன் (எ) மோகன் (59), நெல்சன் (59), ராஜகுமார் மற்றும் காசி ஆகியோர்கள் மேற்படி இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் தகவல் சரிவர சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளதையடுத்து, பசியில் இருந்த இளைஞருக்கு அவர்கள் உணவு வாங்கி கொடுத்து பின் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் உதவியுடன் அன்பு உள்ளங்கள் காப்பகத்தில் அந்த இளைஞரை பத்திரமாக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இளைஞர் தான் கோயம்புத்தூர் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் என்ற தகவலை மட்டும் அன்பு உள்ளஙகள் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோயம்புத்தூரில் கணுவாய் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டதில் மேற்படி இளைஞர் கோயம்புத்தூர் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் கடந்த 11.06.2023 அன்று காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்படி இளைஞரின் பெற்றோர்களை வரவழைத்து இன்று (23.06.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் அந்த இளைஞரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி இளைஞரை மீட்டு பாதுகாப்பு அளித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க உதவிய பொதுமக்களான ஜான்சன் (எ) மோகன், நெல்சன், ராஜகுமார் மற்றும் காசி ஆகிய 4 பேரையும், அவரை பராமரித்த அன்பு உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளான விஜயா மற்றும் தீபா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.