ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பெரியார் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரித்து, பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-
ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு என்ற பெயரில் முகநூல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தலைப்பில் இயங்குகிற முகநூல் பக்கத்தில் Profile Photo-வாக தந்தை பெரியார் அவர்கள் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கான மக்கள் பேராட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்தி காட்டி அதில் வெற்றியும் பெற்றவர்.
ஆனால், மண்ணின் வளம், மனித சுவாசம், சுற்றுபுறச் சூழல் சீர்கேடு ஆகியவற்றிக்கு காரணமாக அமைந்த ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக இயங்குகின்ற இந்த முகநூல் பக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் படம் பொறிக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல நீதிக்கான போராட்டம் பல நடத்தி பல லட்சகணக்கான மக்களை வாழச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 15 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அப்படிப்பட்ட உயிர் பலி கொண்ட இந்த நச்சாலை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தந்தை பெரியார் அவர்கள் படம் பொறிக்கப்பட்டது என்பது வெந்தபுண்ணில் வேல பாய்ச்சுவது போல் இருக்கிறது.
தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட பல்வேறு இயக்கங்கள் அமைப்புகள், மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு எல்லாம் ஸ்டெர்லைட் அகற்றப்பட வேண்டும் என போராடி வருகிறோம். தற்போது ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பெரியாரின் படத்தை முகப்பு படமாக வைப்பது தந்தை பெரியார் அவர்களை கொச்சை படுத்துவதோடு பெரியார் இயக்கங்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
ஆகையால் காவல்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்த முகநூல் பக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்கள் படத்தை நீக்குவதோடு மட்டுமல்ல, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.