தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 10 நகர்புற நல்வாழ்வு மையங்களை இன்று (06.06.2023) திறந்து வைத்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரத்தில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்தார்
பின் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 500 நகர்புற நல்வாழ்வு மையங்களை தொடங்கி வைத்திருக்கிறார்கள். 10,000 மக்களுக்கு ஒரு நல்வாழ்வு மையம் என தமிழ்நாடு முழுவதும் 708 மையங்கள் அமைக்கப்பட்டு இன்று 500 மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன் ரோடு, புல் தோட்டம், சங்குகுளி காலணி, கோபால்சாமிதெரு, டூவிபுரம், அலங்காரத்தட்டு, கே.டி.சி.நகர், முத்தையாபுரம், சிவந்தாகுளம், கதிர்வேல்நகர் ஆகிய 10 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சில்வர்புரம், அத்திமரப்பட்டி, பண்டாரம்பட்டி, செல்சினி காலனி ஆகிய 4 நகர்புற நல்வாழ்வு மையங்களுக்கு கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்திற்கும் சேர்த்து பி அண்ட் டி காலணியில் ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
நகர்புற நல்வாழ்வு மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சளி, காய்ச்சல் போன்ற சிறு பிரச்சனைகளுக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மக்கள் குடியிருக்கும் இடத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் கொண்டு வந்துள்ளார்கள்.
இம்மையத்தில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் 14 மையத்தில் இன்று 10 மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் செயல்படும். அனைத்து மையங்களிலும் உடனடியாக சேவைகள் தொடங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர் அதிஷ்டமணி, மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மருதம் பிரைட்டன் மற்றும் பொதுமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.