தூத்துக்குடியில் மாநகராட்சி அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி பலியான வியாபாரிக்கு மாநகராட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என, இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று ( 31.5.23 ) காலை மாநகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற எதிர்கட்சி அதிமுக கொறடாவும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்:-
தூத்துக்குடி துறைமுகம் செல்லக்கூடிய மீன்வளக்கல்லூரி அமைந்துள்ள புறநகர் சாலை இருள் சூழ்ந்து கானப்படுவதால், அங்கு மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள சத்யா நகர் மேம்பாலம் இறக்கத்தில் திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கனி மார்க்கெட் அண்ணா சிலை அருகில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய கணேஷ் என்பவர் மீது சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரிரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். ஆகவே, உயிரிழந்த வியாபாரி ஜெய கணேஷ்க்கு மாநகராட்சி சார்பில் உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாத வகையில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.