• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - எஸ்பி தகவல்

  • Share on

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாணம் ஆகிய இரு நாட்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் திருக்கோவில்களில் திரு விழாக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச் செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 15.11.2020 முதல் 26.11.2020 வரை 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது. 

இதில் 6ம் நாள் (20.11.2020) அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், 7ம் நாள் (21.11.2020) அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 20.11.2020 அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறக்கூடிய கடற்கரையில்  நடைபெறாது. அதற்குப்பதிலாக கோவில் பிரகாரத்தின் உள்ளேயே நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் 21ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 12 தினங்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும்.

இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் மற்றும் கோவில் வளாகப் பகுதியில் தங்க அனுமதி இல்லை. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு  செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை (20.11.2020 மற்றும் 21.11.2020) தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10000 பகதர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

19.11.2020 அன்று திருச்செந்தூர் கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள அனைத்து வெளியூர் நபர்கள் மற்றும் வாகனங்கள்  அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். 20.11.2020 மற்றும் 21.11.2020 ஆகிய இரு நாட்கள் திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள், மண்டபங்கள் ஆகியவற்றில் யாருக்கும் தங்க அனுமதி கிடையாது. அந்த இரு நாட்களில் விடுதிகளில் தங்குவதற்கு எவ்வித ஆன்லைன் பதிவுகளும் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை அகற்ற முயற்சி : பொதுமக்கள் சாலைமறியல்

வ.உ.சி.நினைவு தினம் : சிலைக்கு தூத்துக்குடி தெற்கு பகுதி கழக அமமுக வினர் மாலை அணிவிப்பு

  • Share on