தூத்துக்குடியில் மதுபோதையில் கார் மற்றும் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13.05.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த தாசன் மகன் ராஜ் (51) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அதே பகுதியில் நிறுத்தியிருந்த மேலும் 2 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜ் நேற்று (14.05.2023) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர்களான ராஜா மகன் சரவணன் (19), இசக்கிமுத்து மகன் செல்வ கணபதி (எ) ராகுல் (20) மற்றும் இருதயராஜ் மகன் மரிய அந்தோணி சாம் (19) ஆகியோர் சேர்ந்து மதுபோதையில் மேற்படி அப்பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோ மற்றும் கார்களின் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் சரவணன், செல்வ கணபதி (எ) ராகுல் மற்றும் மரிய அந்தோணி சாம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே தென்பாகம் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 10 வழக்குகளும், செல்வ கணபதி (எ) ராகுல் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மரிய அந்தோணி சாம் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.