விபத்தில் காயம் ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுக்கு தியாகிகள் உதவித் தொகையானது அவரது கையில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்துள்ள கோரிக்கை மனுவில்:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வாரிசுதாரர் திரு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்கள் விபத்தில் காயம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித் தொகை பெற்று வந்துகொண்டிருந்தார். நடக்க முடியாத சூழ்நிலையால் மார்ச் மாதம் ஊதியம்கூட இன்னும் பெறவில்லை என தெரிய வருகிறது.
எனவே சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவருக்குச் சேர வேண்டிய தியாகிகள் உதவித் தொகையை அவரது வீட்டில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.