வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் நிலங்கள் குறித்த விவரங்களை இணையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்பாக, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசுவதோடு, மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அரசு வருவாய்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் 'கிரெய்ன்ஸ்' இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் தங்கள் நில விபரங்களை பதிவு செய்தால், துறைகளின் திட்டங்கள் குறித்து அறியவும், திட்டங்கள் விவசாயிகளை சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்தவும் முடியும்.
அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறுவதற்காக மத்திய அரசின் இந்த வேளாண் அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அதற்கான பூர்வாங்கப்பணிகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, விவசாயிகளின் நில விபரங்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் நில உரிமையாளர்களின் பெயர், உறவினர் பெயர், சர்வே எண், பட்டா எண், விஸ்தீரணம் நஞ்சை, புன்செய் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்த நில விபரங்கள் அரசின் பேரிடர், வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு, பட்டுவளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை, விதை சான்றளிப்பு, வருவாய்த்துறை ஆகிய 12 துறைகளுக்கு மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்பட உள்ளது.
இந்த நிலையில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் அந்தந்த கிராம வருவாய் நிலங்கள் குறித்த விவரங்களை, கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் கால தாமதம் செய்வதாகவும், அப்பணிகளை உடனே விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசியதோடு, நீங்கள் இப்பணிகளை முடிக்காவிட்டால் வரும் 16ம் தேதி நடைபெறும் ஜமாபந்தியில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை கையெழுத்து போடச் சொல்ல மாட்டேன் என கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி என்பவர் மிரட்டும் தொனியில் பேசி வெளியிட்ட ஆடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்துறை பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், உயர் அதிகாரி என்ற அதிகார தோரணையில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி பேசி வெளியிட்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை கண்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களும், இதனை தங்களது மாநில சங்கத்தின் தலைமை வரை கொண்டு சென்றுள்ளதாகவும், கோட்டாட்சியரின் இத்தகைய செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்களில் ஈடுபடவும் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.