• vilasalnews@gmail.com

ஆசிரியர் முதல் அரசியல்... ஒரே ஒரு திமுக பெண் மாவட்ட செயலாளர்... அசைக்க முடியாத அமைச்சர் கீதாஜீவன்!

  • Share on

தூத்துக்குடி திமுக என்றாலே அங்கே சாமிகள் தான் அடையாளமாக கானப்பட்டனர் அதில் ஒருவர் கே.வி.கே. சாமி மற்றொருவர் என்.பெரியசாமி.

நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்து தென்மாவட்டங்களில் திமுக வின் தளபதியாக ஒரு கால கட்டத்தில் வலம் வந்தவர் கே.வி.கே சாமி. இவர் உட்கட்சி எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் 1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி  பிரிக்கப்பட்டபோது போது அன்றிலிருந்து தான் மரணம் அடையும் 2017 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவின் முகமாகவும், தளபதியாகவும், மாவட்ட செயலாளராகவும், கலைஞரின் முரட்டு பக்தர் என்ற அடையாளத்தோடு திகழ்ந்து இருந்து வந்தவர் என்.பெரியசாமி.


என்.பெரியசாமிக்கு மூன்று பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள். இதில் மூத்த பெண் பிள்ளை தான் கீதாஜீவன் ஆவார். கீதா ஜீவன் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் பி.காம் மற்றும் பி.எட்.,படித்து விட்டு ஒரு ஆசிரியையாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். கீதா ஜீவன் தனது படிப்பு காலம் முதலே தனது தந்தைக்கு தேவையான எழுத்து பணிகளை அவர்தான் அருகில் இருந்து செய்து வந்துள்ளார். தனது தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் அவருக்கு திமுக தலைமைகழகம், முக்கிய பிரமுகர்கள், கட்சிகாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கீதாஜீவன் எதிர்கொண்டு பேசி அதனை குறிப்பெடுத்துக்கொண்டு, தனது தந்தை வந்ததும் அவரிடம் அதை தெரிவிப்பதில் இருந்து தனது அரசியல் பயிற்சியை தொடங்க ஆரம்பித்தார்.


தொடர்ந்து கீதா ஜீவன்,  தங்கம்மாள் பள்ளி, கீதா மெட்ரிகுலேசன் ஆகிய பள்ளிகளின் தலைமை ஆசிரியராக பணியாற்றி பள்ளி நிர்வாகத்தையும் கவனித்து வந்த காலகட்கட்டத்தில் அவருக்கு ஜீவன் ஜேக்கப் என்பவரோடு திருமணமாகிறது. பின் பெரியசாமிக்கு துணையாக மருமகன் ஜீவன் ஜேக்கப் பள்ளி நிர்வாகத்தை கவனித்து அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், 1996 ல் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. மாவட்ட ஊராட்சி தலைவர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தனது மகள் கீதாஜீவனை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வைத்து அதில் வெற்றியும் பெற்று  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆகிறார் கீதாஜீவன். இதன் மூலம் தனது தேர்தல் அரசியல் பயணத்தில் முதல் வெற்றியை எடுத்து வைத்து அரசியலில் காலூன்ற ஆரம்பிக்கிறார் கீதா ஜீவன்.


அதன் பின் அரசியலில் தந்தையோடு சேர்ந்து முழு அரசியலில் பயணத்தில் கீதாஜீவன் வேகம் காட்ட தொடங்குகிறார். திமுகவில் கலைஞரை போல அரசியலில் தனது வாரிசை இறக்குவதில் அவருக்கு இணையாக என்.பெரியசாமி இருந்தார் என்று சொல்லும் அளவிற்கு தனது மகள் கீதாஜீவனை அரசியல் வாரிசாக படுவேகமாக களம் இறக்கி வந்தார் என்.பெரியசாமி.


அதன் தொடர்ச்சியாகத்தான், முழு நேரம் அரசியலில் இறங்கிய கீதாஜீவனுக்கு, அடுத்தடுத்த கட்டம் அரசியலில் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்து, 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கீதாஜீவன் தன் தந்தையிடம் விருப்பம் தெரிவிக்க, அவரும் அதற்கு முயற்சி செய்ய அப்போதைய அரசியல் சூழலில் அது முடியாமல் போகிறது.

அதன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், மீண்டும் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்பொழுது மீண்டும் தன் மகள் கீதாஜீவனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கலைஞரிடம் என்.பெரியசாமி வாய்ப்பு கேட்கிறார். கலைஞரும் கீதாஜீவனுக்கு வாய்ப்பு கொடுத்து விடுகிறார். ஆனால், அதிமுக வேட்பாளர் பி.எச்.பாண்டியனிடம் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தோற்றுவிடுகிறார்.


பின் 2001 சட்ட மன்ற தேர்தல், அதன் பின் நடைபெற்ற தூத்துக்குடி நகர்மன்ற தேர்தல் ஆகியவற்றில் தொடர் தோல்விகளை சந்தித்த என்.பெரியசாமி,  2006 சட்டமன்ற தேர்தலில் தனக்கும் தனது மகள் கீதாஜீவனும் தேர்தலில் சீட் கேட்க, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டிய கலைஞர், உங்களுக்கு ரெண்டு பேருக்கு சீட் வேணுமா? அல்லது ஒரு சீட் மற்றும் அமைச்சர் பதவி வேணுமா என்று கலைஞர் கேட்க, என்.பெரியசாமியும் என் மகளுக்கே சீட் கொடுங்க என விருப்பம் தெரிவிக்கிறார்.

அதன் பின் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் தனது தந்தையின் தொகுதியான தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆகிறார் கீதாஜீவன்.


ஜெனிபர் சந்திரன், ராதிகா செல்வி என மாவட்டத்தில் தனக்கு எதிராக திமுகவில் போட்டியாளர்கள் உருவான நிலையில், அதை தனது தந்தையார் போலவே மிக சாதுர்யமாக எதிர்கொண்டு, அவர்களை அப்புறப்படுத்தி தன்னை நிலை நிறுத்தி கொண்ட கீதாஜீவனை அவரது ஆதரவாளர்கள் பெண் பெரியசாமியாக பார்த்தனர்.

2017 என்.பெரியசாமி மறைவிற்கு பிறகு அந்த இடத்தை பிடிக்க ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக முயன்ற, அதிமுகவில் இருந்து திமுக வந்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் எண்ணத்தை முறியடிக்கப்பட்டு, தெற்கு மாவட்ட செயலாளராக அனிதாவும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கீதாஜீவனும் ஆனார்.


அக்கா தம்பி இடையே முரண்பாடுகள் இருந்ததாக சொல்ல பட்டாலும், கடைசியாக நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் குடும்பத்தில் பெரிதாக யாருக்குமே திமுகவில் வாய்ப்புகள் வழங்கப்படாத நேரத்தில், தனது தம்பி ஜெகனை தூத்துக்குடி மேயராக்கிய பெருமையையும் கீதாஜீவனைத்தான் சேரும்.


தனது தந்தையின் மூலம் அரசியல் பழகி, தனது தந்தையின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி, தனது தந்தை விட்டுச் சென்ற அரசியல் பயணத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து, தனியொரு பெண் மாவட்ட செயலாளராக திமுக வில் கோலோச்சி, அரசியலில் தொடர் வெற்றிகளை குவித்து வரும், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் பெண் சிங்கம் என பட்டம் சூட்டப்பட்ட, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பெ.கீதாஜீவனின் பிறந்த தினம் ( மே 6 ) இன்று!


  • Share on

அப்படியா... கேள்விபட்டதும் தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்து பெற்றுக்கொண்ட தூத்துக்குடி எஸ்பி!

வைரலாகும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரின் ஆடியோ பதிவு - பரபரக்கும் வருவாய்துறை!

  • Share on