உடன்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மது போதையில் படுத்து உறங்கிய குடிமகனால் பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத அசௌகரிய நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மெயின் பஜாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு மதுபான கடையும் உள்ளதால் நாள்தோறும் மதுபானம் வாங்க வரும் ஏராளமான குடிமகன்களில் சிலர், அருகில் உள்ள ஏடிஎம் வாசலிலே மது அருந்துவதும், அதில் மித மிஞ்சிய அளவு போதை ஏறிய குடிமகன்களில் சிலர் ஏடிஎம் வாசலிலேயே மட்டையாவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் வாசலில் மது அருந்திய குடிமகன் ஒருவர் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏடிஎம் மையத்திற்குள் படுத்து குளு குளு ஏசியில் ஹாயாக தூங்கி உள்ளார்.
இதனால் அங்கு உள்ள அசௌகரிய நிலை கண்டு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்காமலேயே திரும்பிச் சென்ற அவல நிலை ஏற்பட்டது.