தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 850 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 2,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று (02.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி திரவியபுரம் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான முருகானந்த் மகன் ஹரிஷ் (23), சேகர் மகன் வசந்த் (23) மற்றும் தூத்துக்குடி பிரூடி காலனியைச் சேர்ந்த பரமசிவன் மகன் சத்திய பிரகாஷ்ராஜ் (21) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ஹரிஷ், வசந்த் மற்றும் சத்திய பிரகாஷ்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 850 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 2100 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.