தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவியர் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக அஞ்சல் துறையின் வங்கிக் கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவ, மாணவியர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.