தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01.05.2023) மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி :-
தமிழ்நாடு முதலமைச்சர், கிராமங்களுக்கு இன்னும் அதிகமாக சென்று கோரிக்கைகளை கேட்டு அதை சரிசெய்து தர வேண்டும் என்று கிராமசபை கூட்டங்களை அதிகப்படுத்தியுள்ளார்கள். நாங்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களின் கோரிக்கைகளை கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முன்னெடுப்பு வாயிலாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அடுத்த நொடியே உங்களுடைய மனுக்களை எல்லாம் பரிசீலித்து அதில் எதையெல்லாம் செய்ய முடியுமோ ஏற்பாடு செய்வதற்கு தனியாக துறையை உருவாக்கி மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் அதிக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். நீங்கள் இங்கே பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறீர்கள். முக்கியமாக பட்டா வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும். குடிநீர் பிரச்சனையை நீக்குவதற்கு ரூ.14 கோடி செலவில் 17,000 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு இணைப்புகள் தரப்பட்டிருக்கிறது. மேலும் ரூ.3.75 கோடி செலவில் தண்ணீர் வழங்குவதற்கு திட்டம் கொண்டுவரப்பட்டு குடிநீர் பிரச்சனை நீக்கப்படும். இங்கே கதர் கிராம துறையின் இடத்தில் விளையாட்டு மைதானம், பூங்கா அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி செய்து தருவதற்கு எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மகளிருக்கு தனியாக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் செய்து தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நேற்று 5 டிராக்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் டிராக்டர் ஓட்டுநர்கள் ஏற்பாடு செய்யப்படும். சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் செய்து தருவதற்கு முயற்சிகள் செய்யப்படும். முதலில் பட்டா மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 1 இலட்சம் பேர் இருக்கிறார்கள். அத்தனை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், ஊராட்சி மன்றத் தலைவரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு சாலை வேண்டும், குடிநீர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். வரலாற்றிலேயே முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். உங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவர் ஒருவரால்தான் முடியும். ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சரின் தங்கையாக இருப்பதால் எந்த அமைச்சரிடமும் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர். மக்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர். அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலர் ரதிதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார், துணைத்தலைவர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.