தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே தின நினைவுச் சின்னத்துக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. , அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மே 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்காக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று, எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுச் சின்னத்துக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. , அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மே தினம் உருவான கதை
நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல் கற்கள்.
1889ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது.