தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 5வதுதெருவில் மதுபானக் கடை அருகில் இருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய கோரி, சமூக ஆர்வலர் காசிலிங்கம் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
டூவிபுரம் 5வது தெருவில் மதுபானக் கடை அருகில் குழந்தைகள் படிக்கும் பள்ளி உள்ளது. மதுபானக் கடையும், பள்ளியும் ஒன்றாக இருப்பதால் பள்ளிக் குழந்தையின் தாய்மார்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்று பலமுறை மதுபானக் கடையை எடுப்பதற்கு மனு அளித்தோம். பல போராட்டங்களை செய்தோம்.
19 வருடங்களாக மதுபானக் கடை செயல்படுவதால் குழந்தைகளுக்கும், குழந்தைகளின் தாய்மார்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மதுபானக் கடையை எடுக்கவில்லை. ஆகையால் குழந்தைகளுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாதுகாப்புக்காக உடனடியாக டூவிபுரம் 5வது தெருவில் செயல்பட்டு கொண்டிருக்கும் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் லைசன்ஸை ரத்து செய்து பள்ளியை மூடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.