ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம் நேற்று கந்தசாமிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் பேசியதாவது:-
மத்திய மோடி அரசு தொடர்ச்சியாக மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டே போகிறது. இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்வது கிடையாது.
அதானி குழுமம் பிரச்சனை நாடு முழுவதும் பூதாகரமாக உள்ள நேரத்தில் அதைப்பற்றி விவாதம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அதானி குழுமத்தில் போலியான 20 கம்பெனியில் 20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது யாருடைய பணம் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி மீது பதவி நீக்க நடவடிக்கை.
மக்கள் மன்றத்திலும் கேள்வி கேட்ட தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் நடவடிக்கை என மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்.
ராகுல் பதவி நீக்கத்தால் அவர் மீது ஒட்டுமொத்த மக்கள் அனுதாபப்படுகின்றனர். இதனால் வரும் தேர்தலில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு போக போகிறது உறுதி. இவ்வாறு முரளிதரன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாநகராட்சி கவுன்சிலர் கற்பககனி, சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, செந்தூர்பாண்டி, ராஜன், மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார முருகேசன், நாராயணசாமி, சேவியர் மிஷியர், பொதுச் செயலாளர் மைக்கேல், கந்தசாமி, துணை அமைப்பு தலைவர்கள் ராகுல், மைதீன், செல்வராஜ், வார்டு தலைவர்கள் தனுஷ், சித்திரை பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.