மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படுகிறது என புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று முதல் 2 நாட்கள் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ரூபி மனோகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்பு கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கு வருகை தந்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் காமராஜர் வழியில் நடந்து கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து தமிழகத்தில் காமராஜரின் நல்ஆட்சி தொடர பாடுபடுவேன் என்றும், தென் தமிழகத்திலிருந்து என்னைப்போல அனைவருமே காமராஜரால் உருவாக்கப்பட்டவர்கள் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் சீட் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், மத்தியில் ஆளக்கூடிய மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படுவது கண்டனத்துக்குரியது எனவும், மாநிலத்தில் ஆளக்கூடிய அதிமுக அரசு அதற்கு துணைபோகும் அரசாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.
விமான நிலையம் வந்த அவருக்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நெல்லை கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.