தூத்துக்குடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தர், முதல் நிலைக் காவலர்கள் சுடலைமணி, மற்றும் சந்தனகுமார் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று (29.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முள்ளக்காடு மகாலட்சுமி நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் ஹரிஹரசுதன் (43) மற்றும் நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் இளவரச பாண்டியன் (51) என்பதும், அவர்கள் அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ஹரிஹரசுதன் மற்றும் இளவரச பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 175 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.