தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்த ஒரே நாளில் விருப்ப நிதியிலிருந்து மின் இணைப்பு பெற்றுத்தந்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரம் 13வது வார்டு வீர இடக்குடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மனைவி லெட்சுமி. இவரது மகள் பேச்சித்தாய் 12ம் வகுப்பும், மகன் ஐயப்பன் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் லெட்சுமி மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இன்று (13.03.2023) உடனடியாக வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் லெட்சுமி வீட்டிற்கு சென்று பார்வையிட்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் உரிய முறையில் விண்ணப்பம் செய்து மின் இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மின் இணைப்பு பெறுவதற்கான வைப்புத்தொகையை தனது விருப்ப நிதியில் இருந்து செலுத்தினார். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் லெட்சுமியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் வீடு முழுவதும் உடனடியாக மின்வயர்கள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு மின்விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லெட்சுமி தெரிவிக்கையில்:-
மின் இணைப்பு கேட்டு கோரிக்கை விடுத்து, ஒரே நாளில் அதுவும், தனது விருப்ப நிதியில் இருந்து வைப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுத்தந்து தனது மகளின் கல்விக்கு ஒளியூட்டிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.