• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே ஊருக்குள் இருக்க பாதுகாப்பு இல்லை... வீடுகளை வீட்டு வெளியேறிய கிராம பொதுமக்கள்!

  • Share on

குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் காற்றாலை நிறுவன உயர் அழுத்த மின்கம்பங்களை அகற்றிக்கோரி, கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊரணியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கே.குமரெட்டையாபுரம் ஊராட்சியில் கே.குமரெட்டையாபுரம், ஆ.வேலாயுதபுரம், ஜெகவீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இதில், கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரக்கூடிய நிலையில், அக்கிராமத்தில் JSW என்ற தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதில், கே.குமரெட்டையாபுரத்தில் உயர் அழுத்த மின்கம்பங்களை அமைத்து வருகின்றது. அந்த மின் கம்பங்களானது ஊரின் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அக்கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சுமார் 33 கிலோ வாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதால், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் விரும்பதகாத உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கூறி, இந்த உயர் அழுத்த மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைத்திட வலியுறுத்தி, கிராம ஊராட்சி மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் முறையிட்டும் பலன் அளிக்காததால்,  3.3.2023 அன்று,  கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறி,  ஊரணி பகுதியில் குடியேறும் போராட்டத்தில் கிராம பொதுமக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கிராம பொதுமக்கள் ஊரணி பகுதியிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில், போராட்டம் தொடர்பாக காலை முதல் பிற்பகல் வரை எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், ஊடகங்களில் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டி வெளியான செய்தியை தொடர்ந்து, பிற்பகலுக்கு மேல் பெயரளவிற்கு, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டாட்சியர்,  கிராம நிர்வாக அலுவலர், காவல் துறையினர் கிராமத்திற்கு வருகை வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில், இவ்விவகாரம் தொடர்பாக சமாதன கூட்டம் நடத்தி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை பொதுமக்கள் தெரிவிக்கக்கூடிய பகுதி வரை காற்றாலை நிறுவனத்தினரின் பணிகளை நிறுத்தி வைக்கப்படும் என்ற அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்று ( 4.3.23 ) காற்றாலை நிறுவனத்தினர் தங்களது பணிகளை தொடர்ந்து வருவதாக கூறும் கிராம பொதுமக்கள், தங்களது பிரச்சனைகளை  கே.குமரெட்டையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமணப்பெருமாள் மற்றும் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கண்டுகொள்ளாதது தங்களிடையே  பெரும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் கிராம பொதுமக்கள்.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன் பறக்க தடை - மாவட்ட ஆட்சியர்!

  • Share on