தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்ட பகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதனால் கடையில் இருந்த 2 பெண் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை குறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருகே பட்டபகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.