திருச்செந்தூர் அருகே சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு மேற்பார்வையில், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (14.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மகேஷ் குமார் (22) திருச்செந்தூர் பரமன்குறிச்சி அய்யனார்நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஆனந்தகுமார் (22) என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் மகேஷ் குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 80 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ஆனந்தகுமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.