தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (14.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகாகிருஷ்ணன் (எ) மந்திரி (25) என்பதும் அவர் அப்பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் மகாகிருஷ்ணன் (எ) மந்திரியை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 520 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட மகாகிருஷ்ணன் (எ) மந்திரி என்பவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.