நீதிமன்ற உத்தரவின் படி தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, தூத்துக்குடி மடத்தூரில் உள்ள தனது கணவரான தாசில்தார் ஞானராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து, பிரிந்து வாழும் அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் ஞானராஜ். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் பறக்கும் படை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவியான கிரேஸி விஜயா என்பவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு 23.6.2021 முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
குழந்தைகள் இருவரும் தந்தையான தாசில்தார் ஞானராஜ் பாதுகாப்பில் தற்போது இருந்து வரும் நிலையில், தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கோரி, தாசில்தார் மனைவி தூத்துக்குடி நடுவர் எண் 3 ல் வழக்கு தொடுத்தார். இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று (8.2.23) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தந்தையின் பராமரிப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் உடனடியாக தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கணவர் ஞானராஜ் மறுப்பதாகக் கூறியும், நீதிமன்ற உத்தரவின் படி தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரியும், மடத்தூரில் உள்ள தனது கணவரான தாசில்தார் ஞானராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து, பிரிந்து வாழும் அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.