அதானி விவகாரத்தில் எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதனை கண்டித்து நாளை தூத்துக்குடியில் போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளதாக, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 2 நாளாக முடக்கின.
இந்நிலையில், பிரதமர் மோடியின் நண்பர் அதானி, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார் எனக்கூறி, இதைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை 6ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், போல்பேட்டையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு நாளை ( பிப்.,6 ) போராட்டம் நடத்தப்படுவதாக, மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.