தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர்.
அப்போது, திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர திமுக செயலர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் மே மாதம் 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கொலை முயற்சி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.
இது சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ள கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் அனிதாகிருஷ்ணன் உள்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் , முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பு வழங்கினார்.