• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் அத்துமீறல் - கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போர்க்கொடி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக கூறி கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில், காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சில காற்றாலை நிறுவனங்கள் எவ்வித அரசு அனுமதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனுமதி இல்லாமல் காற்றாலை அமைத்து வருவதாகவும், அரசு மற்றும் புறம்போக்கு ஓடைகள் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து மின் கம்பங்கள் மற்றும் டவர்களை வெளிமாநில அடியாட்கள் துணையோடு அத்துமீறி ஊராட்சி பகுதிகளில் அமைத்து வருகின்றனர். மேலும்,  கிராம ஊராட்சி பாதைகளை சேதப்படுத்தி, கிராம பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையை தனியார் காற்றாலை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

எனவே, உரிய அனுமதி இன்றி செய்யப்படும் தனியார் காற்றாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், அராஜக போக்கோடு அடியாட்கள் துணையோடு அத்துமீறும் காற்றாலை நிறுவனங்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 கிராம ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு,  ஜனவரி 26ம் தேதி கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக, ( 23.1.23 ) அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ( தணிக்கை ) , வட்டாட்சியர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், காற்றாலை நிறுவனத்தினர் இடையே சமாதான கூட்டம் நடைபெற்றது. 

இதில், குலசேகரன் நல்லூர், அக்கநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, மேல பாண்டியாபுரம், கச்சேரி தளவாய்புரம், பி.துரைச்சாமிபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கொல்லம்பரும்பு, சில்லாங்குளம், வேடநத்தம், ஜெக வீர பாண்டியபுரம், ஆதனூர், புதூர் பாண்டியாபுரம், சாமி நத்தம், ராஜாவின் கோவில், எஸ்.கைலாசபுரம், வாலசமுத்திரம், ஜம்புலிங்கபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மருதன் வாழ்வு, கீழக்கோட்டை, குதிரை குளம், அகிலாண்டபுரம் உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களும், ஒரு காற்றாடி நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர். 

மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த சமாதான கூட்டத்தில், அரசின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒரே ஒரு காற்றாலை நிறுவனத்தினர் மட்டுமே கலந்து கொண்டு மற்ற யாரும் வராமல் இருப்பதிலேயே தெரிந்திந்து கொள்ளுங்கள் காற்றாலை நிறுவனத்தினரின் அராஜக போக்கை என்று, ஊராட்சி மன்ற தலைவர் பேச ஆரம்பித்து கூட்டம் தொடங்கியதுமே பரபரப்பாக ஆனது. ஆனால், கூட்டத்தின் நிகழ்வுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வந்திருந்த ஒரு காற்றாடி நிறுவனத்தினரும் தங்களை செல்போனை பார்த்தவாறு இருந்த செயல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் வர வைக்கும் அளவிற்கு இருந்தது என்று சொல்லும் அளவில் அங்கு நிகழ்வுகள் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற சமாதான கூட்டத்தில்,

காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு விதிப்படி தொழில் வரி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களில் செலுத்தப்பட வேண்டும்.

பொதுப் பாதைகள், வண்டி பாதைகளைகள் பயன்படுத்துவதற்கும், கிராம ஊராட்சியின் பாதைகள் பழுதுபட்டால் அதனை பராமரிப்பதற்கும் ஊராட்சியில் தீர்மானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை ஊராட்சி கணக்கில் செலுத்த வேண்டும்.

காற்றாலை கம்பெனியில் உற்பத்தியில் ஒரு சதவீதத்தை ஊராட்சிக்கு செலுத்துவதற்கு அரசு அனுமதி இருக்கும் பட்சத்தில் அதன்படி ஊராட்சியில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமாதான கூட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இடையே பேசி இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். 

மேலும், காற்றாலை நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தல், அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு வைத்தனர்.

மேலும், காற்றாலை நிறுவனத்தினர் ஊராட்சி மன்ற அனுமதி இன்றி பணிகளை தொடரக்கூடாது, அதுவரை தங்களது பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை காற்றாலை நிறுவனத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊராட்சி சாலைகளை பயன்படுத்துவதற்கு ஊராட்சியின் அனுமதி பெற வேண்டும் இல்லாத பட்சத்தில் ஊராட்சியின் மூலம் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடுப்புகள் அமைக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் தீர்க்கமாக சொல்லி கூட்டத்தை முடித்தனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் வறுமை நிலை அறிந்து, அவர்களிடம் தங்களது வியாபார உத்திகள் மூலம் கணிசமான தொகை கொடுத்து விவசாய நிலங்களை வாங்கி காற்றாலை அமைக்கும் பணிகளில் காற்றாலை நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் வாங்கிய நிலங்களில் காற்றாலை அமைக்கும் பணிக்கு செல்ல, பிற விவசாயிகளின் நிலங்கள் வழியாக நிலத்தின் உரிமையாளர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தி,  விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வேலைகளில் காற்றாலை நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை விவசாயிகள் தட்டி கேட்கும் பட்சத்தில் வெளிமாநில அடியாட்கள் மூலம் மிரட்டுவதும், தாக்குதல் நடத்தும் செயல்களில் காற்றாலை நிறுவனங்கள் ஈடுபடுவதாகவும், இதனால் கிராமங்களில் அசாதாரண சூழல் ஏற்படுவதாகவும் கிராம பொதுமக்கள்,  விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

மேலும், கனரக வாகனங்களில் காற்றாடிகளை கொண்டு செல்ல வழியில் தடையாக இருக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவைகளை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் இடித்து விட்டு, கனகர வாகனங்களை இயக்குகின்றனர். மேலும், கனகரக வாகனங்கள் அதிக பாரத்துடன் ஊருக்குள் செல்வதால் ஊரில் உள்ள பாதைகள் அனைத்தும் சேதமடைந்து கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கிராம பொதுமக்களிடையே புகார் எழுகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து, அட்டூழியத்தில் ஈடுபடும் காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 கிராம ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து வெகுண்டு எழுவதற்கு முன்பாக,  காற்றாலை நிறுவனங்களின் அராஜக போக்கிற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடிவாளம் போட வேண்டும். அதுவே மாவட்டத்தின் அமைதியான சுழலுக்கு வழிவகுக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் உணர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் - மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு!

மாப்பிள்ளையூரணி வியாபாரிகளுக்கு தொழில்கடன் - கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணக்குமார் வழங்கினார்!

  • Share on