• vilasalnews@gmail.com

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் - தூத்துக்குடிக்கு டாடா காட்டிய தெற்கு ரயில்வே!

  • Share on

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில், தொழில் நகரமான தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஒதுக்காமல் தவிர்த்து இருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், தென் மாவட்ட மக்களுக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. இவை ஜனவரி 12ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி - சென்னை இடையே முத்து நகர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஒரு சிறப்பு ரயில் கூட இயக்கப்படாதது தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கவில்லை என்பது, தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தைத் தாண்டி, பெரிய வருத்தத்தையும் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேர்கிறது.

அதேபோல், மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் அதி விரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலானது திருநெல்வேலியில் 16,17 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் நிற்கும் நிலையில், ஜனவரி 16 ம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு, பின் 17 ம் தேதி சென்னையில் இருந்து 18ம் தேதி காலை திருநெல்வேலிக்கு வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டால், பொங்கல் பண்டிக்கை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு பணிக்கு திரும்பும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என தூத்துக்குடி பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த 2019 ம் ஆண்டு வரையிலும் கூட, தாம்பரம் - தூத்துக்குடி இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகை சிறப்பு ரயிலை இயக்கப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு சென்னை - தூத்துக்குடி இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிக்கும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. கோவை - தூத்துக்குடி இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு கட்டண ரயில்களையாது தெற்கு ரயில்வே அறிவித்து பொதுமக்களுக்கு இந்தாண்டு ஓர் ஆறுதலை தந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் போய்விட்டது என்று வேதனை தெரிவிக்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள்.

  • Share on

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

தூத்துக்குடி மாநகராட்சியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளோடு சமத்துவ பொங்கல் கொண்டாடி அசத்திய மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on