தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு சார்பில் தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் கரும்பு, மஞ்சள் மற்றும் பல வகையான காய்கனிகளை வைத்து பானையில் பொங்கலிட்டனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்மசக்தி பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மிக்கேல் நவமணி , தங்க மாரியம்மாள், தேவராஜ், பாலசரஸ்வதி, தங்க கனி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஒருவருக்கொருவர் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழச்சியை பரிமாறிக் கொண்டனர்.