• vilasalnews@gmail.com

ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் : தாசில்தார் மீது வழக்கறிஞர் புகார்

  • Share on

ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர்  செல்வலெட்சுமி என்பவர் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 

"தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் கிராமம் எல்லைக்குட்பட்ட  நிலம் பொறுத்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் IIல் தங்கச்சாமி என்பவர் வாதியாகவும், ராம்குமார் மற்றும் முருகன் என்பவர்கள் பிரதிவாதியாகவும் இருந்து நடைபெற்று வந்த அசல் வழக்கில் கடந்த 24.01.2020 அன்று நீதிமன்றத்தால் வாதியின் வழக்கு செல்லதக்கது அல்ல என்றும் வாதி கோரிய பரிகாரம் கிடைக்க கூடியது அல்ல என்றும் தீர்ப்பும் தீர்ப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது. 

அதன் பின்பு வாதியானவர் உயிருடன் இருக்கும் வரை எந்த வித மேல்முறையீடும் செய்யவில்லை. அதன் பின்பு வாதி இறந்த பின்பு தங்கசாமிக்கு ஜெயராமன், மோகன்ராமன் மற்றும் சந்திர சைத்தன்யா ஆகியோர்கள் வாரிசுகள் என தெரிவித்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட சான்றின் உண்மை நகல் 15.10.2007 அன்று தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எட்டயபுரம் சான்றொப்பம் பெறப்பட்டு அந்த வாரிசு சான்றை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சமர்ப்பித்து வழக்கை மேல் நடத்த கேட்டும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையால் மேல்முறையீட்டு எண் 229/2021 மீண்டும் மறுவிசாரணைக்காக உத்திரவாகப்பட்டு தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் IIல் மீண்டும் வழக்கு கோப்புக்கு எடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் 2ம் பிரதிவாதி முருகன் ஆவார். நான் 2ம் பிரதிவாதிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறேன். இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அசல் வழக்கை நடத்துவதற்கு வாரிசுதாரர்களாக உள்ளவர்கள் எவ்வாறு நடத்துவதற்கு அனுமதி உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு நீதிமன்றத்தால் கூடுதல் எழுவினா எழுப்பப்பட்டது. 

அந்த எழுவினாவின் அடிப்படையில் 07.01.2023 அன்று இறந்து போன வாதி தங்கசாமியின் வாரிசுதாரராக இருக்கின்ற வாரிசுகளில் ஒருவரான ஜெயராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்களின் 06.01.2023 அன்று எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாரிசு சான்றிதழ்  பெறப்பட்டு அதனை தாக்கல்; செய்துள்ளார். மேலும் 30.12.1997 அன்று ராமம்மாள் என்பவர் இறந்து விட்டதாக தெரிவித்து அந்த வாரிசு சான்று ராமம்மாளுக்கு வாரிசுகள் என வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ராமம்மாளின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்திலும் ஒப்படைக்கவில்லை. ராமம்மாளின் இறப்பு சான்றிதழ் இல்லாமல் மேற்கண்ட வாரிசு சான்று வழங்கப்பட்டுள்ளதா என்ற ஐயப்பாடு எழுகிறது. "வருவாய் துறை சட்ட விதிகளின் படி ஒருவர் இறந்து விட்டால் அவருடைய அசல் ஒரிஜினல் இறப்பு சான்று மற்றும் உயிரோடன் மற்றும் அவரது இறந்த வாரிசுகளின் உண்மையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கொடுத்து ஒருமுறை மட்டுமே வாரிசு சான்று வழங்குவதற்கு சட்டம் உள்ளது. 

இந்நிலையில் இவ்வாறு நிலைமை இருக்கும் பொழுது எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பல்வேறு தேதிகளில் 14.02.2000 அன்றும் அதனை உண்மை நகல் என தெரிவித்து 15.10.2007 அன்றும் வழங்கப்பட்டு மீண்டும் 06.01.2023 அன்றும் ஒரு வாரிசு சான்று இறந்து போன ஒரே நபருக்கு வழங்கியது எந்த சட்டத்தின்படி வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. கையூட்டுதல் பெற்றுக் கொண்டு போலியான ஆவணங்களை ஆராயாமல் வாரிசு சான்றுகள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.”

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14.02.2000 அன்று வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழின் மேலே தமிழ்நாடு அரசு வாய்மையே வெல்லும் என்ற முத்திரை உள்ளது. மேலும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எட்டயபுரம் என்ற கோபுர முத்திரையும், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எட்டயபுரம் என முத்திரை இடப்பட்டதில் 15.10.2007 தேதியிட்டு கையொப்பம் உள்ளது. அதில் உண்மை நகல் என போடப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு கால கட்டங்களில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் வாரிசு சான்றுகளில் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னம் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது கிடையாது. 

மேற்க்கண்ட 14.02.2000 அன்று எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தால் வாரிசு சான்று வழங்கப்படாததை போலியான கையொப்பங்களின் மூலம் பெறப்பட்டதாக அரசின் மூலம் தெரிவிக்கப்பட்டால் அந்த வாரிசு சான்றில் உள்ள அரசு முத்திரையை கையாடல் செய்து உருவாக்கியது அந்த வாரிசு சான்றிதழில் உள்ள வாரிசுதாரர் வரிசையில் உள்ள நபர்களையே சாரும். அல்லது இரண்டு வாரிசு சான்றுகளுமே உண்மையாகவே வழங்கப்பட்டதானால் ஒருவருக்கு இரண்டு முறை வாரிசு சான்றுகள் வழங்கிய குற்றத்திற்கு அரசு அதிகாரிகள் ஆளாக நேரிடும்.

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு வாரிசு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் உண்மையான வாரிசு சான்று எது என்பதை ஊர்ஜிதம் செய்தும் இறப்பு சான்றிதழ் இல்லாமலும் போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வாரிசு சான்றை உருவாக்கியவர்கள் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே கொலை முயற்சி வழக்கு - 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா : யூனியன் சேர்மன் பங்கேற்பு!

  • Share on