தூத்துக்குடி அருகே மேலதட்டப்பாறை கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே மேலதட்டப்பாறை கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கரின் 440 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் மெடிக்கல் சண்முகபுரம் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மேல தட்டப்பாறை கம்பளத்தார் சமுதாயம் தலைவர் விநாயகம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுந்தர்ராஜ், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலாஜி, தங்கம்மாள்புரம் பழனிச்செல்வம், அல்லிக்குளம் வெங்கடேஷ், பாலாஜி, தெற்கு சிலுக்கன்பட்டி அய்யாச் சாமி என்ற அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சனிக்கிழமை ( 8.1.2023 ) மாலை, சின்ன மாட்டு வண்டி பந்தயம், ஞாயிற்றுகிழமை ( 9.1.2023 ) காலை, நடு மாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் என இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், முதல் நாளில் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், முன்னாள் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., வும் ஒன்றியச் செயலாளருமான மோகன், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றியச் செயலாளருமான காந்தி காமாட்சி, ஒன்றிய கவுன்சிலர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
அதே போல், இரண்டாவது நாள் ஞாயிற்றுகிழமை ( 9.1.2023 ) காலை நடைபெற்ற நடு மாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் ( பொறுப்பு ) சம்பத், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், மதிமுக பிரமுகர் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட திமுக பிரதிநிதி வெயில் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள், அதனை ஓட்டி வந்த சாரதி மற்றும் துணை சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள், பந்தய ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.