இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாளை முன்னிட்டு, கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றியச் செயலாளருமான மோகன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், ஒன்றியச்செயலாளருமான காந்தி காமாட்சி உள்ளிட்ட அதிமுகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதே போல், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமையிலான பண்பாட்டுகழகம் நிர்வாகிகளும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, கயத்தாறு மணிமண்டபத்திற்கு வருகை தந்த கடம்பூர் ராஜு எம்எல்ஏ, மோகன், காந்தி காமாட்சி உள்ளிட்டோருக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமையிலான தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.