தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் ஓடும் வேனில் மேலே அமர்ந்து கொண்டு ஆபத்தை உணராமல், பொதுமக்களுக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடித்து கூச்சலிட்டபடி ஆரவாரமாக சென்றவர்கள் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
2023 ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நேற்றிரவு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் ஓடும் வேனில் மேற்கூரையில் நின்று கொண்டு, பட்டாசுகள் வெடித்தும், கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்தும் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் இளவரசன் (27) என்பவருக்கு சொந்தமான TN 75 1408 என்ற வாகன பதிவின் கொண்ட "சிங்கார வேலன்" என்று எழுதப்பட்டிருந்த டூரிஸ்ட் வேனின் மேலிருந்து தான் இதுபோன்று ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடித்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வேனின் உரிமையாளர் இளவரசன்(27) மற்றும் பட்டாசுகள் வெடித்த ஜெயம்(25) ஆகிய இருவர் மீதும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல், கவனக்குறைவாக வெடிபொருள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, டூரிஸ்ட் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.