தூத்துக்குடியில் அதிகாலையில் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செந்தில்குமார் (34), சிவில் காண்ட்ராக்டரான இவர் நேற்று தனது டாட்டா சுமோ காரை, தனது வீடு அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அவர், தூத்துக்குடி தீயணைப்பு படை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.