தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரிவசூலை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி பாக்கி உள்ள கட்டிடங்களுக்கு அவ்வப்போது சீல் வைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வரியினங்களை செலுத்துவதற்கு வசதியாக 16 வரிவசூல் மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் தற்போது வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் தீவிர வரி வசூல் நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், வசதிக்காகவும் இன்று முதல் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வரிவசூல் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.