தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள விநாயகர் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கீதாஜீவன் எம்எல்ஏ, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதி மெயின் ரோட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் இன்று (18.11.2020 ) காலை முற்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் தலைமையிலான திமுகவினர் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், இந்துஅமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை அகற்றாமல் மாற்று ஏற்பாடுகளுடன் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும் என உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். கனகராஜ், மாவட்ட செயலாளர் மான்சிங், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கே.பாலமுருகன், வடக்கு மண்டல தலைவர் எஸ்.பி.எஸ். கனகராஜ், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார், மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக கானப்பட்டது.