புதியம்புத்தூர் அருகே காணாமல் போன இரண்டு சிறுவர்கள், மேல அரசரடியில் உள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
புதியபுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அரசரடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி பூரணம்(40). இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் (இரட்டையர்) உள்ளனர். கணவர் செல்வராஜ் இறந்த நிலையில் பூரணம் மேல அரசரடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் பூரணத்தின் மகன்களான அருண் சுரேஷ் (12) மற்றும் அருண் வெங்கடேஷ் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் 11.11.2020 அன்று மதியம், பூரணத்திற்க்கு சொந்தமான ஹோட்டலில் அவர்களது வீட்டிற்கு உணவு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்ப வராமல் காணாமல் போயுள்ளனர்.
இதுகுறித்து பூரணம் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (12.11.2020) மேல அரசரடியில் உள்ள கண்மாயில் சிறுவர்கள் இருவர் சடலமாக மிதந்துள்ளதாக கிடைத்த தகவலின் படி புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் காணாமல் போன அச்சிறுவர்கள்தான் என்பது உறுதியானது. இதனையடுத்து சிறுவர்களின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்க நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் : இப்போது பருவ மழை காலம் என்பதால் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை தண்ணீர் அதில் தேங்கி நிற்கும். அதில் ஆழம் எவ்வளவு என்பது சிறுவர்களுக்கு தெரியாது. பெற்றோர்களின் கண்காணிப்பில் சிறுவர்கள் குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிக்க அழைத்து செல்ல வேண்டும், இது போன்று குழந்தைகளை தனியாக அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.