தூத்துக்குடியில் மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து ரூ.20ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மகன் சாகுல் ஹமீது (45), இவர் அப்பகுதியில் மருந்து கடை (மெடிக்கல்) நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 6 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, கடையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது மேஜை ட்ராயரில் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், ரூ 2ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள் திருடு போயிருந்தது.
இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருக பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிந்துள்ள கைரேகைகளை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.